Skip to main content

நமது இயேசு கிறிஸ்துவின் நாமம் நானிலமெங்கும் ஓங்கிடவே


நமது இயேசு கிறிஸ்துவின் நாமம்
நானிலமெங்கும் ஓங்கிடவே
புனிதமான பரிசுத்த வாழ்வை
மனிதராம் எமக்களித்தார்
தேவ கிருபை எங்கும் பெருக
தேவனை ஸ்தோத்தரிப்போம்
பாவ இருள் அகல
தேவ ஒளி அடைந்தோம்

அவரை நோக்கிக் கூப்பிடும் வேளை
அறிவிப்பாரே அற்புதங்கள்
எனக்கெட்டாத அறிந்திடலாகா
எத்தனையோ பதிலளித்தார் - தேவ

பதறிப்போன பாவிகளாக
சிதறி எங்குமே அலைந்தோம்
அவரை நாம் தெரிந்தறியோமே
அவர் நம்மை தெரிந்தெடுத்தார் - தேவ

பலத்த ஜாதி ஆயிரமாக
படர்ந்து ஓங்கி நாம் வளர
எளிமையும் சிறுமையுமான
எமக்கவர் அருள் புரிவார் - தேவ

நமது கால்கள் மான்களைப் போல
நடந்து ஓடிப் பாய்ந்திடவே
உயர் ஸ்தலத்தில் ஏற்றுகின்றாரே
உன்னதமான ஊழியத்தில் - தேவ

பரமனேசு வந்திடும்போது
பறந்து நாமும் சென்றிடுவோம்
பரமனோடு நீடூழி வாழும்
பரம பாக்கியம் பெறுவோம் - தேவ