Skip to main content

பிராண நாதன் என்னில் வைத்ததாம் அன்பினை தியானிக்கும் போதெல்லாம் கண்ணீர் பெருகுதே


பிராண நாதன் என்னில் வைத்ததாம் அன்பினை
தியானிக்கும் போதெல்லாம் கண்ணீர் பெருகுதே
அன்பின் சொரூபனாய் ஆருயிர் நேசனாய்
நீச தூசி என்னை நேசிக்கலானீரே
என் இயேசுவே நான் உம்முடையவன்
நீர் என் சொந்தம் என்றென்றுமாய்
ஆவி ஆத்துமா சரீரம் பலியாய்
படைத்திட்டேன் ஏற்றுக் கொள்வீர்

தாயின் வயிற்றினில் பிரித்த தாம் நாள் முதல்
பற்பல பாதையில் பரிவுடன் காத்தீரே
வஞ்சக சாத்தானின் சூழ்ச்சியினின்றுமே
பறித்திழுத்தெந்தனை உம் சொந்தமாக்கினீர் - என்

குயவனின் கையில் களிமண்ணைப் போலவே
என்னை உம் கையிலே வைத்திட்டேன் நாயகா
என் சொந்த இஷ்டமோ ஏதும் வேண்டாம் நாதா
உம் நோக்கம் என்னில் பூரணமாகட்டும் - என்

நேசர் கரத்தினில் தீமை ஏதுமுண்டோ
யாதும் என் நன்மைக்கே என்பதை அறிகுவேன்
ஜுவாலிக்கும் அக்கினியோ பெருக்கான வெள்ளமோ
பட்சிக்க வொட்டீர் அமிழ்த்தவும் பார்த்திடீர் - என்

என்னையும் எந்தனுக்குள்ளதாம் யாவையும்
நேசர் கரத்தில் முற்றுமாய் வைத்திட்டேன்
ஜீவனோ மரணமோ பிராண நாதன் என்னில்
வாஞ்சிப்பதெதுவோ சம்பூரணமாகட்டும் - என்

மரண இருள் பள்ளம் தாண்டிடும் நேரத்தில்
இயேசு என் நேசரின் கரமதைக் காண்பதால்
மகிழ்வுடன் ஏகுவேன் அக்கரை யோர்தானில்
நித்தியம் நித்தியம் ஆனந்தம் கொள்ளுவேன் - என்