எத்தனை இன்பமையா ஏழை எனக்கெத்தனை இன்பமையா
ஏழை எனக்கெத்தனை இன்பமையா
சத்திய வேத வினோத விசேஷங்கள்
எத்தனை இன்பமையா
சத்துரு சேனைகளால் உலகுடன்
சாத்தான் செய் தீமைகளில்
பார்த்துப் படித்துத் தினமும் ஜெயம் பெற
பாத்திரமானதுவே
பட்டினி தாகத்தையும்
பலவித கட்டுகள் கவலையும்
சட்டை செய்யாமல் சந்தோஷமடைந்திட
சக்தியுமீந்திடுமே
துன்பம் பெருகிவிட்டால்
அன்பர் முகம் தூரமில்லையெனவே
இன்ப மொழி தரும் இங்கித வேதத்தில்
எல்லாம் அதிசயமே
தீய வழி நடந்து சிறியன
யான் செய்த வினைகளெல்லாம்
நேயமுடன் பொறுத்தாளுகிறாரென்று
கூறும் நல் வேதமதே
ஆரும் சகாயமின்றி அனாதையாய்
தீரும் சமயத்திலும்
ஊரும் உற்றாரும் வெறுக்கும்
வேளையில் உற்ற துணையிதுவே
வீடு விட்டோடுகையில் வேதம்
ஒன்று தேடி எடுத்துக் கொண்டால்
காடுமலையும் நல்வீடு வெளிச்சமும்
ஆகுமென்றோதுமிது
நித்திய வாழ்வு உண்டு, மோட்ச
வீட்டில் நேயர் பலருமுண்டு
தோத்திர கீதங்கள் ஓசை கேட்டானந்தம்
கொள்வோ மென்றோதுமிது